Print this page

"தமிழ் அன்பர்” மகாநாடு. புரட்சி - துணைத் தலையங்கம் - 10.12.1933 

Rate this item
(0 votes)

சென்னையில் நடைபெற இருக்கும் தமிழ் அன்பர் மாகாநாட்டைப் பற்றி இரண்டொரு சுயமரியாதை மகாநாடுகளிலும், பல சுயமரியாதை சங்கங்களிலும் அம்மகாநாடானது பார்ப்பனர்கள் தமிழர் மீது ஆட்சி செலுத்தவும் தமிழ்ப்பண்டிதர்களை அடிமை ஆக்கிக்கொள்ளவும் பார்ப்பன ரல்லாத உபாத்தியார்களை அடக்கிவைக்கவும் பார்ப்பனர்களில் பலருக்கு உத்தியோகமும் வருவாயும் ஏற்படுத்தவும் செய்யப்படும் ஒரு சூழ்ச்சி என்ப தோடு தமிழ் கல்வி என்பதையே தங்கள் இஷ்டப்படி மாணாக்கர்களுக்கு ஊட்டுவதற்கு ஏற்ற தந்திரம் என்றும் பேசி அதை பகிஷ்கரிக்கத் தீர்மானித் திருப்பது யாவரும் அறிந்திருக்கலாம். அந்தப்படியே ஒரு பலமான உணர்ச்சியும் தமிழ் மக்களுக்குள் இருந்து வருவதையும் பார்க்கலாம். 

ஆனால் இதை அறிந்த பார்ப்பனர்கள், கவர்னர் பிரபு தங்கள் மகா நாட்டை ஆசீர்வதித்திருப்பதாவும், யூனிவர்சிட்டியார் தங்களை ஒப்புக் கொண்டு தங்களுக்குப் பணம் கொடுத்திருப்பதாகவும் பார்ப்பனரல்லாத பிரமுகர்கள் தங்களுடன் கலந்திருப்பதாகவும் பிறர் நம்பும்படி எவ்வளவோ தந்திரங்கள் செய்து வருகிறார்கள். பார்ப்பனர் ஆதிக்கத்திற்கு பயந்த சிலர் தங்கள் பெயரைக் கொடுத்திருப்பதுடன், சில பத்திரிகைகளும் அந்த தந்திரங்களுக்கு உதவி செய்து வருகின்றன. 

இது நிற்க, அம்மகாநாட்டை பகிஷ்கரிக்கவேண்டுமென்ற தீர்மானம் ஒருபுறமிருக்க. அம்மகாநாட்டில் பிரேரேபிக்க என்று சில தீர்மானங்கள் அனுப்பப்பட்டிருப்பதாய்த் தெரியவருகின்றது. இது அம்மகாநாட்டுக்குச் சென்று அங்கு நமது தீர்மானங்களை செய்ய முயற்சித்துப் பார்ப்பதால் அம்மகாநாட்டை நாம் பகிஷ்கரித்து சரி என்று மக்களுக்கு எடுத்துக்காட்ட செய்த காரியமாயிருக்கலாம். 

இருந்தாலும் அத் தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதையும், ஏற்றுக்கொண்டாலும் நிறைவேற்றப்படத்தக்க ஆதரவு கிடைக்காது என்பதையும் இப்போதே நாம் 'ஜோசியம்' சொல்லுவோம். 

 

ஏனென்றால் அம்மகாநாட்டில் பார்ப்பன சூட்சியே மூளையாய் இருப்பதோடு பணக்காரர்கள் ஆதிக்கமும், பார்ப்பனீயப் பணக்கார அரசாங்க ஆதிக்கமும் அதற்கு அடிமைப்பட்டு உதவியாய் இருப்பதால் சுலபத்தில் நாம் வெற்றி பெற்றுவிட முடியாது. 

ஆனால் பார்ப்பன சூட்சியையும் பணக்கார ஆணவத்தையும், அவை இரண்டையும் அஸ்திவாரமாய்க் கொண்ட ஆட்சியையும் ஒழிக்க வேண்டு மென்று மக்கள் பலரும் ஒருமனதாய் நினைப்பதற்கு இதுபோன்ற மகா நாடுகளின் நடவடிக்கைகள் அனுகூலமாய் இருக்குமென்பதில் ஐயமில்லை . 

இதிலிருந்து ஒரு விஷயம் தெரிந்துகொள்ளவேண்டியது நமக்கு அவசியமாயிருக்கிறது. பார்ப்பனர்களின் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் இருந்தாவது இனி பண்டிதர்கள் என்பவர்களுக்கும் பார்ப்பனரல்லாத ஏழை உபாத்தியாயர்கள் என்பவர்களுக்கும் புத்திவருமா? என்பதுதான். அப்படி அவர்களுக்குப் புத்தி வந்ததற்கு அறிகுறி என்னவென்றால் அவர்கள் சமதர்ம இயக்கத்தில் சேரவேண்டியதுதான். சமதர்மப் பத்திரிகைகளையும் புத்தகங்களையும் எழுதிப் பரப்ப வேண்டியதுதான். அதை விட்டு விட்டு இராமாயணத்திற்குத் தத்துவார்த்தம் சொல்லிக்கொண்டிருப்பதில் பய னில்லை என்று தெரிவித்துக்கொள்கிறோம். 

புரட்சி - துணைத் தலையங்கம் - 10.12.1933

 
Read 84 times